

மாணவர் சேர்க்கை, மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. 12-ம் வகுப்பு வரை அனைத்துவிதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாகக் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுப் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படும். இந்த ஆண்டு கரோனா பரவல் தீவிரத்தால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் துரிதமாக முடித்து, பாடங்களை இணைய வழியில் நடத்தப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்து வரும் சூழலில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
காணொலி மூலம் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், கல்வித்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதிப்பெண் சான்றிதழ், மாணவர் சேர்க்கை, அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துதல், கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், இலவசப் பாடப் புத்தகங்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே கரோனா 3-வது அலையால் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண்ணைக் கணக்கீடு செய்யப் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் தலைமையில், 3 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மதிப்பெண் கணக்கீட்டு முறை தயார் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.