Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு செய்ய பள்ளிக்கல்வி செயலர் தலைமையில் 10 பேர் குழு: சிபிஎஸ்இ பரிந்துரைகளையும் பரிசீலிக்க திட்டம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்ணை கணக்கீடு செய்ய பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, சிபிஎஸ்இ பரிந்துரைகளையும் பரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வுரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது.

இதையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்படும். அந்தக் குழு வழங்கும் பரிந்துரைகள் அடிப் படையில் இறுதி மதிப்பெண் வழங் கப்படும் என்று தமிழக அரசு அறி வித்திருந்தது.

அதன்படி, தற்போது 10 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்;

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படுகிறது.

குழு உறுப்பினர்கள்

இதன் உறுப்பினர்களாக உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷா ராணி,தனியார் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் என்.லதா, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஏ.ஸ்டெல்லா அமலோற்பவமேரி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் யு.கணேசன், தனியார் பள்ளி முதல்வர் எச்.ஜேம்ஸ் சத்தியராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு தேர்ச்சி வழங் கும் விவகாரத்தில், இந்தக் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கரோனா பாதிப்பால் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து, மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பீட்டை நிர்ணயம் செய்வதற்காக சிபிஎஸ்இ வாரியமும் நிபுணர் குழு அமைத்துள்ளது.

இந்தக் குழு ஓரிரு நாளில் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.

மாணவர்களின் உயர்கல்வி விவகாரம் என்பதால் சிபிஎஸ்இ வழங்கும் பரிந்துரைகளையும் பரிசீலனை செய்து தனது அறிக்கையை இறுதி செய்ய தமிழக குழுவினர் முடிவு செய்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x