

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையின் பருவத்தேர்வுகள் மற்றும் எம்சிஏ, எம்பிஏ., பி.எட்., சேர்க்கைக்கான நுழைவு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளதாக பல்கலை துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் தெரிவித்தார்.
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பல்கலை பருவ தேர்வுகள் ஜூலை 1 ம் தேதி முதல் ஆன் லைன் வாயிலாக நடைபெற உள்ளது.
மேலும் எம்.சி.ஏ., எம்.பி.ஏ., பி.எட்., சேர்க்கைக்கான நுழைவு தேர்வுகள் ஜூன் 16 ம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் முதுநிலை சேர்க்கைக்கான படிவங்களை http://www.mothertheresawomenuniv.ac.in/ என்ற பல்கலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.
மேலும் எம்.ஏ, எம்.காம், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்.சி, எம்.எட் ஆகிய முதுகலை பாடங்களும் மாணவிகளுக்கு பயில்விக்கப்படவுள்ளது.
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பாட வகுப்புகள் எம்.பில்., பி.எச்.டி ஆகிய ஆய்வு பாடங்களின் வகுப்புகளும் நடைபெறவுள்ளது.
மாணவிகள் ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்வதற்கு மாநில அரசு இரண்டு கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி உள்ளது. பல்கலை கட்டமைப்பு பணிகள் மற்றும் மாணவிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள 30 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏழை எளிய மாணவிகள் தங்கி படிப்பதற்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நடப்பு ஆண்டில் பல்கலையின் பாடத்திட்டங்கள் சர்வதேச பாடங்களுக்கு இணையாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் இங்கு பயிலும் மாணவிகளுக்கு எளிதாக பணிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது, என பல்கலை துணைவேந்தர் வைதேகிவிஜயகுமார் தெரிவித்தார்