Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:00 AM

மருத்துவ கல்வி சேர்க்கை 51% அதிகரிப்பு: பொறியியல் சேர்க்கை 13% சரிந்தது

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி சேர்க்கை 51 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் பொறியியல் கல்விச் சேர்க்கை 13.4 சதவீதம் சரிந்திருக்கிறது என்று மத்திய கல்வி அமைச்சக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அகில இந்திய உயர்க் கல்வி ஆய்வுப் பிரிவு, நாடு முழுவதும் செயல்படும் உயர்க் கல்வி நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2019-20 ஆண்டுக்கான ஆய்வறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 1,043 பல்கலைக் கழங்கள், 42,434 கல்லூரிகள், 11,779 சுயநிதி கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கடந்த 2019-20 கல்விஆண்டில் 3.85 கோடிபேர் உயர்க்கல்வியில் சேர்ந்துள்ளனர். இதில்1.96 கோடி பேர் மாணவர்கள். 1.89 கோடி பேர் மாணவிகள்.

உத்தர பிரதேசம் முதலிடம்

உயர்க் கல்வி மாணவர் சேர்க்கையில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 2-வது இடத்திலும் தமிழகம் 3-வதுஇடத்திலும் உள்ளன. ராஜஸ்தான், கர்நாடகம், மத்தியப் பிரதேச மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

நாடு முழுவதும் உயர்க் கல்விநிறுவனங்களில் 15,03,156 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 57.5 சதவீதம் பேர் ஆண் கள். 42.5 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

நாட்டின் உயர்க் கல்வி நிறுவனங் களில் 78.6 சதவீத நிறுவனங்கள் தனியாரை சேர்ந்தவை அதிக பட்சமாக ஆந்திராவில் 81%, தெலங்கானாவில் 80%, உத்தர பிரதேசத்தில் 78.5%, தமிழகத்தில் 77.6 சதவீத தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை 51.1 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை 13.4 சதவீதம் சரிந்திருக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் கூறும்போது, ‘‘பெண் கல்விக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கல்வியின் மூலம் மட்டுமே சமுதாயத்தில் பெண்களை முன்னேற்ற முடியும்.

இதேபோல தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அகில இந்திய உயர்க் கல்வி ஆய்வுப் பிரிவின் அறிக்கையின்படி இந்தியாவில் உயர்க் கல்வி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x