

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிய குழந்தைகளுக்காக ஆசிரியை ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் இலவசமாகக் கல்வி கற்பித்து வருகிறார்.
காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் கவிஞர் பா.தென்றல். இவர் வார, மாத இதழ்களில் கவிதைகள், கட்டுரைகளை எழுதி வருகிறார். அவர் 'தேவதைகள் கூட்டம்' என்ற பெயரில் உள்ளூரில் பல பள்ளிக் குழந்தைகளை ஒருங்கிணைத்து அவருடைய வீட்டில் மாதம் ஒருமுறை கதை சொல்லும் கூட்டம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் கரோனாவால் கடந்த ஆண்டு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து ஆசிரியை தென்றல், காரைக்குடி பகுதி பள்ளிக் குழந்தைகளை வாட்ஸ் அப் குழு மூலம் இணைத்து, கல்வி தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
தொடர்ந்து பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியதும், இணைய வசதி இல்லாத குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று பாடம் கற்பித்தார். அதேபோல் இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் நிலையில், மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி கற்பித்து வருகிறார்.
இதுகுறித்து ஆசிரியை பா.தென்றல் கூறும்போது, ''தற்போது எங்கள் பகுதிகளில் உள்ள குழந்தைகளை அழைத்து புதிர், விளையாட்டு போன்றவை மூலம் பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். எனது வீட்டுத் தோட்டத்திலும் சொல்லிக் கொடுப்பேன். இதனால் அவர்கள் இயற்கையோடு இணைந்து பாடம் கற்றுக் கொள்கின்றனர். பெற்றோரும் ஆர்வமுடன் தங்களது குழந்தைகளை அனுப்புகின்றனர். குழந்தைகளும் விருப்பத்துடன் படிக்கின்றனர்'' என்று தெரிவித்தார்.