

கரோனா தடுப்பூசி கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு, கோவாக்சின் தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் இன்னும் அனுமதி கிடைக்காத சூழல் ஆகியவற்றால் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்ல முடியாமல் இந்திய மாணவர்கள் தவிப்புடன் காத்திருக்கின்றனர்.
நொய்டாவைச் சேர்ந்த தொழில்நுட்ப இளங்கலைப் படிப்பை முடித்த மாணவர் ஸ்ரீகாந்த். அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் இவருக்கு முதுகலை படிக்க இடம் கிடைத்துள்ளது. எனினும் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட அவருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி கிடைப்பதில் தாமதமாகி வருகிறது.
இதுகுறித்து மாணவர் ஸ்ரீகாந்த் கூறும்போது, ''நான் குழப்பமான மனநிலையில் இருக்கிறேன். நான் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டிருக்கிறேன். அமெரிக்கா சென்றால் அங்கு இரண்டாம் தவணைக்கு அதே தடுப்பூசி கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. தடுப்பூசிக்காகப் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்க வேண்டும். கலவையான தடுப்பூசிகள் கூடக் கிடைக்கலாம்.
ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் எனக்கு வகுப்புகள் தொடங்கவுள்ளன. நான் இந்தியாவிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலோ அல்லது விசா ரத்தாகி விட்டாலோ என்னால் அங்கு சென்று படிக்க முடியாது'' என்று கவலைப்படுகிறார்.
இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட இந்திய மாணவர்கள், மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று நிறைய வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் இந்தத் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதேபோல மற்றொரு மாணவரின் தந்தை காசி விஸ்வநாதன் கூறும்போது, ''பெருந்தொற்றால் கடந்த ஆண்டே என் மகனின் படிப்பை இழந்தோம். கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காகச் செலவிட்ட ரூ.2.5 லட்சம் வீணானது. இந்த ஆண்டும் தடுப்பூசி பிரச்சினைகளால் தடுமாறி நிற்கிறோம்.
மகனின் முதல் செமஸ்டர் படிப்புக்கு ரூ.10 லட்சம் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். அதைக் கட்டிய பிறகு தடுப்பூசி காரணங்களால் அவனால் அமெரிக்கா செல்ல முடியவில்லை என்றால், ஒட்டுமொத்தப் பணமும் வீணாகும்.
நான் மட்டுமல்ல வெளிநாடு சென்று படிக்கத் தயாராகி வரும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் இந்த நிலையில்தான் உள்ளனர். மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி ஜூன் 5-ம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கோவிட்-19 மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளால் படிக்க வெளிநாடு செல்ல முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள் OIA-II Division பிரிவைத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.