

கல்வி கற்க வெளிநாடு செல்லும் புதுச்சேரி மாணவர்களுக்கு இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தத் துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பான சூழலை உருவாக்க புதுவை அரசு பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் கல்வி கற்கும் புதுவை மாணவர்கள் தங்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை ஏற்று வெளிநாடு செல்லும் புதுச்சேரி மாணவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகளைச் செய்ய ஆளுநர் தமிழிசை சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதற்கான ஏற்பாடுகளைச் சுகாதாரத்துறை உடனடியாகச் செய்துள்ளது. தங்களது கோரிக்கையை ஏற்று அரசு உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக வெளிநாடுகளில் கல்வி பயிலும் புதுவை மாணவர்கள் தனக்கு நன்றி தெரிவித்துள்ளதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
100% தடுப்பூசி செலுத்திய 10 கிராமங்கள்- பிரதமருக்குக் கடிதம்
அவர் மேலும் கூறுகையில், "புதுச்சேரியில் ஆறு கிராமங்களும், காரைக்காலில் 4 கிராமங்களும் என மொத்தம் 10 கிராமங்கள் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபற்றிப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். சுதந்திர தினத்துக்கு முன்பாக புதுச்சேரியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் இலக்கை வைத்து முயற்சி எடுக்கிறோம். புதுச்சேரி மாநிலத்திலுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும். அரசுத் துறைச் செயலர்கள், தங்கள் துறைகளில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களிடம் தடுப்பூசி பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுய உதவிக் குழுக்களுக்கு விருது, பரிசுகள் தர, பேரிடர் மேலாண்மைத்துறை நிதி ஒதுக்க உத்தரவிட்டுள்ளேன். கல்வித்துறை தனது கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தினருக்குத் தடுப்பூசி எடுத்துகொள்ளக் குறுஞ்செய்திகளை அனுப்பலாம்" என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.