

பிளஸ் 2 தேர்வு ரத்து என்ற அறிவிப்பால் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களே அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும், அரசுக் கல்லூரிகளில் சேர்க்கையை முடித்தபின்பே தனியார் கல்லூரிகளில் சேர்க்கை என அறிவிக்க வேண்டும் எனவும் காந்திய மக்கள் இயக்கம் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்துக் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பா.குமரய்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''கரோனா பரவல் காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நடத்திய காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களுமே தேர்வை நடத்த வேண்டும் என்றே சொன்னார்கள். ஆனால், தற்போது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். திடீரெனத் தேர்வை ரத்து செய்வது என்பது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாகும் என்பது கல்வியாளர்கள் கருத்து. பிளஸ் 2 தேர்வு ரத்து தொடர்பாகப் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன.
சிபிஎஸ்இ என்றழைக்கப்படும் மத்திய மேல்நிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படிப்பவர்கள் 12 லட்சம் மாணவர்கள் மட்டுமே. ஆனால், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுமார் 2 கோடி மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு எழுதுபவர்கள். எனவே தேர்வு ரத்து தொடர்பாக அதிகம் கவலைப்படவேண்டியது மாநில அரசுகளும், மாநிலப் பாடத்திட்டங்களில் படித்தவர்களுமேயாகும்.
தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர் கல்வித்துறைச் செயலாளர், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.
இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது.
என்ன செய்திருக்கலாம்?
பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யாமல் அரசு சில நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் என்று காந்திய மக்கள் இயக்கம் கருதுகிறது. இப்போது தேர்வுகளை ரத்து செய்திருப்பதன் மூலம் கல்லூரிகளில் யாரும் நேரிடையான வகுப்புக்குச் செல்லப்போவதில்லை. மீண்டும் ஆன்லைன் வழியான வகுப்புக்குத்தான் செல்லப்போகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் அவசரமாக முடிவெடுத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
பல கோடிப் பேர் வாக்களிக்கும் தேர்தலை எவ்வளவு திட்டமிட்டுப் பல கட்டங்களாக நடத்தினார்கள். மாணவர்களுக்கான தேர்வு விஷயத்திலும் இதுபோல் காலத்தை நிர்ணயித்து நடத்தி இருக்கலாம். நோய்த்தொற்றுக் காலத்தில் மாணவர்களின் உடல் நலம் மிக முக்கியமானது. ஆனால், தற்போது நோய்த்தொற்று குறைந்து வரும் வேளையில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தேர்வினைத் திட்டமிட்டு நடத்தியிருக்கலாம்.
தேர்வு மையங்களை அவர்கள் படிக்கும் பள்ளியில் மட்டுமல்லாது அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், மிகப் பெரிய திருமணக் கூடங்களில் கூடத் தேர்வு நடத்தியிருக்கலாம். மேலும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் உயர் கல்வியில் சேர்வதற்கான சேர்க்கையை நடத்துவதன் மூலம் மாணவர்களின் நலனும் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் நிலைப்பாடு ஆகும். இனி மாணவர்கள் பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நுழைவுத்தேர்வுப் பயிற்சிக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
எழும் கேள்வி
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வை ரத்து செய்ததாகச் சொல்லப்பட்டது. அதே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு, பொறியியல் படிப்புக்கு ஜேஇஇ தேர்வு, சட்டப்படிப்புக்குத் தேசிய நுழைவுத்தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு என மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேர மட்டும் 30 நுழைவுத்தேர்வுகள் வரை நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகளை எல்லாம் நடத்தப்போகிறார்களா இல்லையா? அப்படியென்றால் எப்படி நடத்தப்போகிறார்கள் என்பதற்கான விளக்கம் இல்லை.
பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு நுழைவுத்தேர்வை நடத்துவது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் இனி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு என மத்திய அரசு கொண்டு வருவதற்கு முயற்சியோ என்ற ஐயம் எழுகிறது. புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்திட வாய்ப்புகளைத் தற்போதைய முடிவு அதிகப்படுத்தியுள்ளது எனக் கல்வியாளர்கள் கருதுவதை நிராகரிப்பதற்கில்லை.
என்ன செய்யவேண்டும்?
சிபிஎஸ்இ தேர்வு ரத்து என்று அறிவிப்பு வெளியான உடனே தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடங்கிவிட்டன. அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ இல்லையோ எதற்கும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்த்துவிடுவோம் என்பதே பெற்றோரின் மனநிலை. அதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் கல்லூரிகள் பணம் பண்ண ஆரம்பிக்கும்.
இந்த ஆண்டுத் தேர்வு ரத்து என்ற அறிவிப்பால் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களே அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் இவர்களின் பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டு கல்லூரிச் சேர்க்கை விஷயத்திலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் கண்காணிக்க வேண்டியது அவசியம். அரசுக் கல்லூரிகளில் சேர்க்கையை முடித்தபின்பே தனியார் கல்லூரிகளில் சேர்க்கை என அறிவிக்க வேண்டும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் வழிக் கற்றல் முறை அதிகரித்து விட்டது. இதனை முழுமையான கல்வி என்று சொல்வதற்கில்லை. இந்தக் கல்விக்கு ஏன் முன்பு போல அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள் எனப் பெற்றோர்கள் யோசிக்கிறார்கள். இதுகுறித்தும் அரசுகள் சிந்திக்கவேண்டும்.
இந்த நேரத்தில் நாம் பல சுயநிதிக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் நிலையையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. மாணவர்களிடம் முழுக் கல்விக் கட்டணத்தைப் பெற்ற பின்னும் ஆசிரியர்களுக்கு ஊதியம் தராமலும், சிலர் அரைகுறை ஊதியம் வழங்கியும் வருகின்றனர். இதனால் பல சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, முறையான ஊதியத்தை அவர்கள் பெற வழிவகை செய்ய வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்துகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே பொறியியல், வேளாண்மை, கால்நடை அறிவியல், சட்டம், அறிவியல், கலை பிரிவுகளுக்கான படிப்புகளுக்குச் செல்கின்றனர். எனவே மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் விஷயத்தில் அரசு கவனமாக இருக்கவேண்டும்.
தேர்வினை ரத்து செய்து மாணவர்களைக் காப்பாற்றி விட்டோம் எனப் பெருமிதம் ஒருபுறம் இருந்தாலும் அவர்களின் எதிர்கால வாழ்வு குறித்தும் யோசிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அதனை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகள் செயலாற்ற வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.