Published : 05 Jun 2021 07:32 PM
Last Updated : 05 Jun 2021 07:32 PM

விரைவில் கல்லூரி ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகள்: குழு அமைப்பு

தமிழகக் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இணைய வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும்போது, பாலியல் சீண்டல்கள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனால் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகக் கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளில் புதிய வழிமுறைகளை வகுக்க, கல்லூரி முதல்வர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழு ஆன்லைன் வகுப்புகளுக்குத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து ஜூன் 11-ம் தேதிக்குள் உயர் கல்வித்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளில், கல்லூரிகளுக்குச் செல்லும்போது உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதைப் போல ஆன்லைன் வகுப்புகளிலும் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், வகுப்புகள் நடைபெறுவதைப் பதிவு செய்ய வேண்டும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக ஏதேனும் புகார் எழுந்தால் அதைக் கல்லூரி முதல்வர் அல்லது கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் தெரிவிக்கவும், பிரச்சினையைச் சரிசெய்யவும் வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x