Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான - எஃப்எம்ஜிஇ தேர்வை தள்ளிவைப்பது அவசியம்: முதல்வருக்கு லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் இயக்குநர் முகமது கனி கடிதம்

சென்னை

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான எஃப்எம்ஜிஇ தேர்வை 4 வாரம் தள்ளிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் இயக்குநர் முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலின் எஃப்எம்ஜிஇ (FMGE) தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக ஓராண்டு பணியாற்றிவிட்டு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்றும் நடைமுறை அமலில் உள்ளது.

இத்தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் ஆண்டுதோறும் ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஜூன்18-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஹால் டிக்கெட், தேர்வு மையம் ஒதுக்கீடு போன்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே, கரோனா தொற்று ஊரடங்கால் நேரடி பயிற்சி வகுப்புகள் இல்லை. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள இளம் மருத்துவர்கள் மேலும் பதற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்துள்ள மருத்துவர்களுக்கு இத்தேர்வுக்கான மையங்கள் தமிழகத்திலேயே, அவர்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். கடந்த காலம்போல அண்டை மாநிலங்களில் மையங்களை ஒதுக்கினால், வாகன வசதி இல்லாத இக்காலத்தில் தேர்வு எழுத இயலாமல் போய்விடும். இத்தேர்வு எழுதுவதில் பெரும்பாலானோர் பெண் மருத்துவர்கள். தற்போதைய சூழலில், அவர்களால் வெகு தூரம் சென்று தேர்வு எழுத முடியாது. தங்கும் இடம், உணவுக்கு சிரமப்படுவார்கள்.

ஊரடங்கு காரணமாக, தேர்வுக்கு நேரடியான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளவோ, நூலகங்களை பயன்படுத்தவோ, ஒன்றாக சேர்ந்து படிக்கவோ முடியாத நிலையில் மருத்துவர்கள் உள்ளனர்.

இவர்களில் பலர் இன்னும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. எனவே, தேர்வை4 வாரங்கள் தள்ளிவைத்தால், அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு தேர்வை எதிர்கொள்வார்கள். அதனால், தேர்வை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்குமாறு தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு தாங்கள் கடிதம் எழுத வேண்டும்.

இப்பிரச்சினையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முகமது கனி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x