

பிளஸ் 2 தேர்வு விவகாரத்தில் எப்போது இறுதி முடிவு வெளியிடப்படும் என்று மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, திருச்சி விஎன் நகரில் உள்ள கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் உள்ள கருணாநிதி உருவப் படத்துக்கு மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, கரோனா பரவல் தடுப்பில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது:
சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்டதைப்போல், மாநிலத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கு, “பிளஸ் 2 தேர்வு விவகாரத்தில் கல்வியாளர்கள், பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மருத்துவ நிபுணர் குழு, தோழமைக் கட்சியினர் உட்பட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, 2 நாட்களில் அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில், இ-மெயில் முகவரி அளித்து, தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் கருத்து கூறுமாறு கேட்டுள்ளோம். மேலும், மாவட்டந்தோறும் பெற்றோரிடம் கருத்துக் கேட்டு அறிக்கை அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருடன் நாளை மாலை 4 மணியளவிலும், அதன்பிறகு கல்வியாளர்கள், பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் ஆகியோருடன் மாலை 5 மணியளவிலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
அதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் (மே 5) காலை, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் தமிழ்நாடு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அவர் இறுதி முடிவை அறிவிப்பார்."
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.