Published : 02 Jun 2021 11:57 AM
Last Updated : 02 Jun 2021 11:57 AM

சிபிஎஸ்இ-ஐத் தொடர்ந்து சிஐஎஸ்சிஇ 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிஐஎஸ்சிஇயும் 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். கரோனா சூழலில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சிஐஎஸ்சிஇயும் 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து சிஐஎஸ்சிஇ தலைமை நிர்வாக அதிகாரி ஜெர்ரி அரதூண் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "நாட்டில் கோவிட் பெருந்தொற்று நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய சிஐஎஸ்சிஇ முடிவு செய்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பும், நலனுமே முக்கியம்.

12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிவிப்பதில், நியாயமான மற்றும் நடுநிலையான அளவுகோல் பயன்படுத்தப்படும் என்று உறுதியளிக்கிறோம். மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் பள்ளிகளில் நடத்தப்பட்ட அக மதிப்பீட்டுத் தேர்வுகளின் முடிவுகளும் கணக்கில் கொள்ளப்படும். இதுகுறித்து விரைவில் பள்ளிகளுக்கு அறிவிக்கப்படும். தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று ஜெர்ரி அரதூண் தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு சில மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதினால், அவர்களுக்குத் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். கரோனா சூழல் சீரடைந்த பிறகு அந்தத் தேர்வுகள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனா 2-வது அலையால் சிஐஎஸ்சிஇ வாரியத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஆண்டும் கரோனா பரவலால் சிஐஎஸ்சிஇ வாரியம், பொதுத் தேர்வுகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x