

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவியதையடுத்து 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்திவைத்தது. ஜூன் 1-ம் தேதி தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுபோலவே பல மாநிலங்களிலும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
கரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்தியக் கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இதில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கருத்துத் தெரிவித்தன. அதேசமயம் மாற்று முறையில் மதிப்பீடு செய்யலாம் என சில மாநிலங்கள் கூறின.
இதற்கிடையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் நடத்தவும், தேர்வு முடிவுகளை செப்டம்பர் மாதம் வெளியிடவும் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது.
எனினும் 12-ம் வகுப்புத் தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து அடுத்த 2 நாட்களில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்தியக் கல்வியமைச்சர் பொக்ரியால் கரோனாவுக்குப் பிந்தைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்பு, நிதி, வர்த்தகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு, பெட்ரோலியம்,பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு ஆகிய துறைகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் பிரதமரின் முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளின் செயலாளர்கள் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மீண்டும் ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்டாகின. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே முக்கியம். அதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களின் பதற்றத்துக்கு முற்றுப்பள்ளி வைக்கப்பட வேண்டும்.
பதற்றமான இந்தச் சூழலில் மாணவர்களைத் தேர்வெழுத நிர்பந்திக்கக் கூடாது. விரைவில் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் உரிய முறைப்படி அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.