Published : 28 May 2021 01:34 PM
Last Updated : 28 May 2021 01:34 PM

கரோனா காலத்தில் தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

கரோனா காலத்தில் தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாகக் கடந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற குழந்தைத் திருமணங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்துக் குழந்தைகள் உரிமை அமைப்பான சி.ஆர்.ஒய். (CRY) ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''சமீபத்தில் சி.ஆர்.ஒய். நடத்திய ஆய்வின்படி 2020-ம் ஆண்டு மே மாதத்தில் குழந்தைத் திருமணங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. அம்மாதத்தில் 318 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

சேலம், தருமபுரி, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 72 பழங்குடியின குக்கிராமங்களில் குழந்தைத் திருமணம் பரவலாக நடைபெறுகிறது. பொதுவாக மே மாதத்தில் முகூர்த்தத் தேதிகள் அதிக அளவு வருவதால் அந்த மாதத்தில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகின்றன.

சேலம் மாவட்டத்தில் 2019 மே மாதத்தில் 60 குழந்தைத் திருமணங்கள் கண்டறியப்பட்டன. இது 2020 மே மாதத்தில் 98 ஆக உயர்ந்தது. தருமபுரியில் 2019 மே மாதம் சுமார் 150 குழந்தைத் திருமணங்களும் 2020 மே மாதத்தில் 192 திருமணங்களும் நடந்துள்ளன. இந்த அதிகரிப்புக்கு மிக முக்கியக் காரணம் கரோனா தொற்று.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 19 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளில் 8.69 சதவீதப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யப்பட்டுள்ளது. இதில் தருமபுரியில் 11.1 சதவீதமும் சேலத்தில் 10.9 சதவீதமும் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இது கரோனா காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கல்வி, பிற வளங்கள் இல்லாமை

தொற்றுநோய் காரணமாக ஆய்வுக்கான தகவல்களைச் சேகரிப்பது மிகவும் கடினமாக இருந்தது. கரோனாவால் பெரும்பாலான கல்வி மையங்கள் மூடப்பட்டுள்ளன தொலைதூரக் குழந்தைகளுக்கு எந்தக் கல்வியும் இல்லாததாலும், எளிய குடும்பங்களுக்குப் போதிய வளங்கள் இல்லாததாலும் ஆணாதிக்க மனநிலையாலும் குழந்தைகளின் மீதான உரிமை மீறல்கள் அதிகமாகியுள்ளன.

கோவிட் தொற்றுத் தடுப்பை நிர்வகித்து வரும் அரசாங்கம், அதே வேளையில் குழந்தைத் திருமணப் பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு கிராமப்புறக் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவை பலப்படுத்துவதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தனி முயற்சியாக அல்லாமல், ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும்''.

இவ்வாறு சி.ஆர்.ஒய். அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x