Published : 27 May 2021 03:10 am

Updated : 27 May 2021 11:27 am

 

Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 11:27 AM

‘ஃபேஸ் மேப்பிங்’ முறைகேடுகளைக் கண்டறியும் ‘ஃபேக் பஸ்டர்’ எனும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரோபர் ஐஐடி ஆய்வாளர்கள் சாதனை

face-mapping

சென்னை

இன்றைய நவீன யுகத்தில் அறிவியலும், தொழில்நுட்பமும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகி விட்டன.தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியானது சாதக, பாதகங்களை சம அளவில் கொண்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. தற்போது உலகளவில் இணையவழி யில் நடைபெறும் முறைகேடுகள், பணமோசடிகள்தான் பெரும் அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன. மேலும், ஒருவரின்முகத்தை இன்னொருவரின் முகம்போல மாற்றும் ‘ஃபேஸ் மேப்பிங்’ (Face mapping)தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

புகைப்பட அளவில் இருந்த ‘ஃபேஸ் மேப்பிங்’ தற்போது காணொலிகளிலும் வந்துவிட்டது. தொடக்கத்தில் பெண்களைஇழிவாக சித்தரிக்கும் செயலுக்கு ‘ஃபேஸ்மேப்பிங்’ அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது இணையவழியில் நடைபெறும் நேர்காணல், தேர்வுகளில் உரிய நபர்களின் முக அமைப்பைப் போலவே இன்னொரு நபரின் முகம் ‘ஃபேஸ் மேப்பிங்’ மூலம் மாற்றப்படுகிறது.


சட்டவிரோதமான இந்த செயல் மூலம் பல்வேறு குற்றச்சம்பவங்கள் தினசரி நடைபெற்று வருகின்றன. இவற்றைக் கண்டறிவதும், தடுப்பதும் சவாலாக உள்ளன. மேலும்,ஹேக்கிங் மூலம் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதால் ஜூம் உள்ளிட்ட சில செயலிகள் வழியாக ஆலோசனைகள் நடத்த வேண்டாம் என்று மத்திய அரசும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ‘ஃபேஸ் மேப்பிங்’ பயன்படுத்தப்பட்டு உள்ளதைக் கண்டறிய‘ஃபேக் பஸ்டர்’ (Fake Buster) என்ற புதிய தொழில்நுட்பத்தை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரோபர் ஐஐடி கல்வி நிறுவனம்வடிவமைத்துள்ளது. பேராசிரியர்கள் அபிநவ் தால், ராமநாதன் சுப்ரமணியன் மற்றும் மாணவர்கள் வினீத் மேத்தா, பாருல் குப்தா ஆகியோர் கொண்ட பிரத்யேக குழு, ஆஸ்திரேலியாவின் மோனாஷ்பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தக் கருவியை தயாரித்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் அபிநவ் தால் கூறியதாவது:

தற்போதைய கரோனா பரவல் சூழலில்பெரும்பாலான நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். மேலும், அலுவல் கூட்டங்கள், கருத்தரங்குகள், தேர்வுகள், நேர்காணல்கள் உட்பட பெரும்பாலான பணிகள் இணையவழியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

முறைகேடுகளை எளிதில் கண்டறியலாம்

இவற்றில் ‘ஃபேஸ் மேப்பிங்’ மூலம்முக அமைப்பு துல்லியமாக மாற்றப்பட்டு, பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதைத் தடுக்கும் வகையில்தான் ‘ஃபேக்பஸ்டர்’ தொழில்நுட்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இணையவழி கருத்தரங்கம் மற்றும் நேர்காணல்களில் ‘ஃபேஸ் மேப்பிங்’ மூலம் வேறு ஒருவர் கலந்து கொள்வதை எளிதாகக் கண்டறியலாம்.

அதேபோல், போலி செய்திகள், ஆபாசப் படங்கள் உட்பட சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களின் உண்மைத் தன்மையை அறியவும் இதுஉதவும். இதை கணினி உள்ளிட்ட சாதனங்களில் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் பயன்படுத்தலாம்.

உலகளவில் முதல்முறையாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘ஃபேக் பஸ்டர்’தொழில்நுட்பம் ஜூம், ஸ்கைப் இணையசெயலிகளில் வெற்றிகரமாக பரிசோதனைசெய்து, தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, தனிநபர் தொடங்கி அரசு, தனியார் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்தகட்டமாக செல்போன் உள்ளிட்டசாதனங்களில் பயன்படுத்தும் விதமாக‘ஃபேக்பஸ்ட’ரில் மாற்றங்கள் செய்து வருகிறோம். மேலும், குரல் மாற்றிகள் மூலம்செய்யப்படும் முறைகேடுகளைக் கண்டறியும் கருவியை வடிவமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளோம். ‘ஃபேக் பஸ்டர்’ விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.ஃபேஸ் மேப்பிங்‘ஃபேஸ் மேப்பிங்’ முறைகேடுக‘ஃபேஸ் மேப்பிங்’ முறைகேடு‘ஃபேக் பஸ்டர்’புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்புரோபர் ஐஐடி ஆய்வாளர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x