Last Updated : 21 May, 2021 06:37 PM

 

Published : 21 May 2021 06:37 PM
Last Updated : 21 May 2021 06:37 PM

தந்தை நினைவாக ஆதரவற்றோரின் உணவுக்காகச் சேமித்த உண்டியல் பணம்: கரோனா நிவாரண நிதியாக வழங்கிய மாணவி

தந்தையின் நினைவாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்கச் சேமித்த உண்டியல் பணத்தை கரோனா நிவாரண நிதிக்காகத் தஞ்சாவூர் ஆட்சியரிடம் பள்ளி மாணவி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்த திருநீலகண்டன் - பாக்கியலட்சுமி தம்பதியின் ஒரே மகள் சாம்பவி (12). திருநீலகண்டன் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு மின்சார விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து பாக்கியலட்சுமி, தான் பார்த்து வந்த ஆசிரியர் பணியை விட்டுவிட்டுத் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே 2018-ம் ஆண்டு கஜா புயலின்போது இவர்களது வீட்டில் தென்னை மரங்கள் ஏராளமாக முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதற்காகத் தமிழக அரசு ரூ.1.5 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கியது. இந்த நிதியில் பாக்கியலட்சுமி, பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் விளையாடக் கைப்பந்து மைதானத்தை அமைத்துக் கொடுத்தார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், பாக்கியலட்சுமிக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

தாயைப் போல் மகளும்..

பேராவூரணியில் 6-ம் வகுப்புப் படிக்கும் சாம்பவி, உண்டியலில் தாய் மற்றும் உறவினர்கள் வழங்கும் தொகையைச் சேமிக்கும் பழக்கம் உடையவர். ஒவ்வோர் ஆண்டும் தான் சேமித்த தொகையைக் கொண்டு, தன்னுடைய தந்தையின் நினைவு தினத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வாங்கிக் கொடுத்து வந்தார்.

தற்போது கரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளின்படி, மாணவி சாம்பவி தன் தாயுடன் இன்று (21-ம் தேதி) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் தன்னுடைய சேமிப்புத் தொகையான ரூ.8,300-ஐ வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் சாம்பவியின் செயலைப் பாராட்டியதோடு, மாணவி படிக்க விரும்பிய மருத்துவர் படிப்பைப் படிக்க வாழ்த்தியும், தாயைப் போல் மகளும் பிறருக்கு உதவும் குணம் கொண்டதையும் பாராட்டினார்.

இதுகுறித்து பாக்கியலட்சுமி கூறுகையில், ''நான் பேராவூரணி அருகே பொன்னாங்கண்ணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் தற்காலிக ஆசிரியராக 6 ஆண்டுகள் வேலை பார்த்து வந்தேன். கணவர் இறந்ததும், மகளைப் பராமரிக்கவும், கணவர் விட்டுச் சென்ற விவசாயத்தை கவனிக்கவும் ஆசிரியர் பணியை விட்டுவிட்டேன்.

கஜா புயலின்போது ஏராளமான தென்னை மரங்கள் சேதமாகின. இதற்கு அரசு வழங்கிய நிவாரண நிதியை அரசுப் பள்ளி மாணவிகள் கைப்பந்து விளையாட மைதானம் அமைத்துத் தந்தேன். தற்போது என் மகளும், தான் சேமித்த உண்டியல் தொகையை கரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அதற்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x