

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கரோனா பராமரிப்பு மையம் அமைக்கக் கொள்கை ரீதியான ஒப்புதலைத் துணைவேந்தர் குர்மீத் சிங் அளித்துள்ளார். துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்கு பிறகு இந்த மையம் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு புதிதாக 1,797 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 28 வயது இளைஞர் உட்பட ஒரே நாளில் அதிகபட்சமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,749 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,212 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதற்கிடையே புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கரோனா பராமரிப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகப் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங், பல்கலைக்கழகத்தில் கரோனா பராமரிப்பு மையத்தை அமைப்பதற்குக் கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளார். துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பிறகு இம்மையம் நிறுவப்படும்.
தேவைப்படும் சூழலில் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சிகிச்சைக்கு முன்னுரிமை அடிப்படையில் போதுமான அளவு படுக்கைகள் மற்றும் சிறப்பு வார்டுகளை ஒதுக்கவும் பல்கலைக்கழகம் அறிவுறுத்தும்.
அத்துடன் புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தணிக்க இது ஒரு சிறப்பு ஏற்பாடாகச் செய்யப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.