ஏழை மாணவர்களின் இணையக் கல்விக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?- மத்தியக் கல்வி அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

ஏழை மாணவர்களின் இணையக் கல்விக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று மத்தியக் கல்வி அமைச்சகம் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையம், மத்தியக் கல்வி அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான ராதகந்தா த்ரிபாதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின்படி ஏழ்மை நிலையில், ஸ்மார்ட் போன்கள் இல்லாத, போதிய மின்சாரம், இணைய வசதி இல்லாமல் இந்தியா முழுவதும் அணுக முடியாத தொலைதூரப் பகுதிகளில் ஏராளமான மாணவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

'வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்' என்று மத்திய மாநில அரசுகள் பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் மின்சார, இணைய வசதி இல்லாத வீடுகளில் வசிப்போர், தங்களின் கல்வித் தேவைக்காகப் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இது இந்தியாவில் கல்வியில் போதாமையை உருவாக்கி மாணவர் சமூகங்களிடையே இடைவெளியை ஏற்படுத்துகிறது.

கரோனா காலத்தில் அரசின் நேரடித் தலையீடு இல்லாததால் இந்தியா முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களின் கல்வியை இழந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் முறையான திட்டமிடல் இல்லாததன் காரணமாக கல்விக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வசதி, முறையான மின்சாரம் மற்றும் இணைய வசதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் த்ரிபாதி கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் இதற்கு மத்தியக் கல்வி அமைச்சகத்தின் செயலாளர், உயர் கல்வித்துறைச் செயலாளரிடம் இருந்து எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே மீண்டும் இதே கோரிக்கையை நினைவூட்டி இந்தத் தகவல் அனுப்பப்படுகிறது.

இதற்கு 4 வாரங்களுக்குள் மத்தியக் கல்வி அமைச்சம் மற்றும் கல்வித் துறைச் செயலாளர்களிடம் இருந்து எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 13-ன் படி ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கட்டாயப்படுத்தும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in