கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா பரவல் தடுப்புப் பணிக்காக ஒருநாள் ஊதியம்: தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் முடிவு

Published on

கரோனா பரவல் தடுப்புப் பணிகளுக்காக நடப்பு மாதமான மே மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை அரசுக்கு வழங்க தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கரோனா 2-வது அலை மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான அளவுக்கு ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளை ஏற்படுத்தி கரோனாவில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா தடுப்புப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற ஆசிரியர்களிடம் இருந்து மே மாத சம்பளத்தில் ஒருநாள் சம்பளத்தைச் சேகரித்து தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க முடிவெடுத்துள்ளோம்.

எனவே, மன்றத்தின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர், அரசு ஊழியர் பெருமக்களும் கரோனா பரவல் தடுப்புப் பணிகளுக்கு மனமுவந்து ஒருநாள் சம்பளத்தை வழங்கிட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in