அண்ணா நூலகத்துக்குப் புத்துணர்வு தரும் விதமாக பராமரிப்புப் பணிகள்: அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி

அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி: கோப்புப்படம்
அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி: கோப்புப்படம்
Updated on
1 min read

அண்ணா நூலகத்துக்குப் புத்துணர்வு தரும் விதமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என, அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி இன்று (மே 08) சென்னை, அண்ணா நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"அண்ணா நூலகத்துக்குள் நுழையும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆனால், வாசலில் போடப்பட்டிருக்கும் கால்மிதி கூட சரியாக இல்லை. அந்தளவுக்கு, அண்ணா நூலகம் பராமரிக்கப்படாத நிலை நிலவுகிறது. இது சங்கடமாக இருக்கிறது. துறை அதிகாரிகள், இயக்குநர்கள் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இங்கு நிறைய பேர் படித்து குடிமைப் பணிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் எங்களிடத்தில் எந்தளவுக்கு அண்ணா நூலகம் உதவிகரமாக அமைந்தது என்பதை கூறுவார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வையை நினைத்தால் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.

அண்ணா நூலகத்துக்குப் புத்துணர்வு தரும் விதமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வின் அறிக்கையை தயார் செய்ய சொல்லியிருக்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகள் என்ன நடந்தது என்பதை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு, முதலில் இதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதியும் இதனை பார்வையிட்டு சென்றிருக்கிறார்.

அதிமுக பலவற்றில் அரசியல் செய்திருக்கிறது. நூலகத்திலும் அரசியல் செய்திருப்பது வேதனையாக இருக்கிறது. கருணாநிதி, அண்ணா புகைப்படங்களை எடுப்பதையே வேலையாக செய்திருக்கின்றனர். ஆக்கப்பூர்வமான எதனையும் செய்யவில்லை.

தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சொல்வதை நிறுத்திவிட்டு, நூலகத்துக்குத் தேவையானவற்றை செய்வதுதான் எங்கள் அரசாங்கம்.

பள்ளிக்கல்வியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பெற்றோர்கள், அதிகாரிகள், பள்ளி நிர்வாகம் ஆகியோர் இணைந்த 'திங்க் டேங்க்' (Think Tank) உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறோம்.

ஆன்லைன் வகுப்புகள், கல்விக் கட்டணம், 10-ம் வகுப்பு மதிப்பெண்களை எப்படி மதிப்பிடுவது, 12-ம் வகுப்பு தேர்வு குறித்தும் ஆலோசனை நடத்துவோம்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கல்வி தொலைக்காட்சி அழகாக இருக்கிறது. அதனை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in