

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அமலாகிறது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. 3,000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க 26.04.2021 முதல் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
மேலும், பல கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இன்று (மே 08) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக, தமிழ்நாடு அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருந்த கீழ்க்காணும் தேர்வுகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இத்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.