Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

எஸ்ஆர்எம் – ‘தி இந்து’ இணைந்து மே 8 முதல் ஜூன் 6 வரை மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழிகாட்டலுக்கான மெய்நிகர் மாநாடு

சி.முத்தமிழ்செல்வன்

சென்னை

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ‘தி இந்து’ நாளிதழ் இணைந்து 15 பிரிவுகள் கொண்ட இணையவழி மாநாட்டை வரும் மே 8 முதல் ஜூன் 6-ம் தேதிவரை நடத்த உள்ளன. தொழில்துறையின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப உருவாகி மற்றும் வளர்ந்து வரும் படிப்புகள் குறித்து இதில் விளக்கப்படும். இந்நிகழ்ச்சியில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்து செயல்படும்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

தற்போது பல தொழில் நிறுவனங்களில் பல்வேறு புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கு ஏற்றபணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. அதற்கு நமது மாணவர்களை தயார்படுத்த வேண்டி உள்ளது. அதேசமயம் நமது 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவை தேர்வு செய்வது, பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப விரைவாக வளர்ந்து வருகின்ற தொழில் பிரிவுகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவது அவசியமாகிறது.

இதற்காக, ‘தொழிற்கல்வி வழிகாட்டலுக்கான எஸ்ஆர்எம் மெய்நிகர் மாநாடு 2021’ வரும் மே 8 முதல் ஜூன் 6 வரை15 பிரிவுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவும் ஒரு மணிநேரம் நடைபெறும். பின்னர், பங்கேற்பாளர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்கலாம்.

இலவசமாக பங்கேற்கலாம்

இந்த இணையவழி மாநாட்டில் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம். இதற்கு முன்பதிவு செய்ய bit.ly/SRMISTTH என்ற லிங்க்கை பயன்படுத்தலாம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள க்யூஆர் குறியீடை ஸ்கேன் செய்யலாம்.

மாநாடு குறித்து எஸ்ஆர்எம் பல்கலை. துணைவேந்தர் (பொறுப்பு) சி.முத்தமிழ்செல்வன் கூறும்போது, “தற்போதைய சவாலான பேரிடர்காலத்தில் மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற சரியான கல்வியை தேர்ந்தெடுக்க உதவுவதும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுமே இதன் நோக்கம். பொறியியல் மற்றும் இணை படிப்புகளை படிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் தங்களின் தேவை, வேலைவாய்ப்புக்கு ஏற்ற படிப்புகளை தேர்வு செய்யலாம். உதாரணமாக பொறியியலில் இயந்திரவியல் பிரிவில் படிக்கும் மாணவர் செயற்கை நுண்ணறிவு அல்லது தரவு அறிவியல் பாடத்தை கூடுதலாக படிக்கலாம்” என்றார்.

கல்வி உதவித் தொகை, விருது

இந்த மாநாட்டில் பங்கேற்கும் சிறு நகர, கிராமப்புற மாணவர்களில் தகுதியான மாணவர்களுக்கு 4 மண்டலங்களில் இருந்து தலா ஒருவருக்கு எஸ்ஆர்எம் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதுதவிர, கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டலை வழங்கும் நிறுவனங்கள், தனிநபர்களை ஊக்குவிக்கும் விதமாக டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் நற்செயல் அங்கீகார விருது வழங்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x