Published : 30 Apr 2021 04:55 PM
Last Updated : 30 Apr 2021 04:55 PM

சிபிஎஸ்இ அங்கீகாரம்; பள்ளிகளின் புதிய இணைப்பு, புதுப்பித்தலுக்கு இறுதிக்கெடு நீட்டிப்பு

சிபிஎஸ்இ அங்கீகாரத்தைப் பெறும் வகையில் பள்ளிகளின் புதிய இணைப்புக்கான பதிவு, மேம்படுத்துதல் மற்றும் நீட்டித்தலுக்கான இறுதிக்கெடு தேதி கரோனா பரவல் காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 23 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 68 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே எதிர்காலத் தேவையை முன்வைத்து புதிய பள்ளிகளின் இணைப்புக்கான முன்பதிவு மற்றும் புதுப்பித்தலில் பல மாற்றங்களை சிபிஎஸ்இ மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சிபிஎஸ்இ அங்கீகாரத்தைப் பெறும் வகையில் பள்ளிகளின் புதிய இணைப்புக்கான பதிவு, மேம்படுத்துதல் மற்றும் நீட்டித்தலுக்கான இறுதிக்கெடு நாள் கரோனா பரவல் காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தற்போது கரோனா தொற்றுப் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் சூழலில், சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் அங்கீகாரத்தைப் பெறும் வகையில் விண்ணப்பித்துள்ள புதிய பள்ளிகளின் இணைப்புக்கான முன்பதிவு, பழைய பள்ளிகளின் அங்கீகாரத்தை உயர்த்துதல் மற்றும் நீட்டித்தலுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களின் இறுதிக்கெடு நீட்டிக்கப்படுகிறது.

தாமதக் கட்டணம் எதுவும் செலுத்தாமல் 30.06.2021 வரை மேற்குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். சிபிஎஸ்இ அங்கீகாரத்துக்கான புதிய இணைப்பு விதிமுறைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. தேசிய கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ள பரிந்துரைகளின்படி, சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு முறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x