Published : 21 Apr 2021 05:11 PM
Last Updated : 21 Apr 2021 05:11 PM

சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: யூபிஎஸ்சி அறிவிப்பு

நாட்டில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, தேர்வை நடத்தும் யூபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆட்சிப் பணியின் முக்கியத் தேர்வுகளான ஐஏஎஸ் (Indian Administrative Service), ஐஎஃப்எஸ் (Indian Foreign Service), ஐபிஎஸ் (Indian Police Service) தேர்வுகளை மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கோவிட் தொற்றால் தினசரி பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் பகுதியளவு ஊரடங்கை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றன. அதேபோல மத்திய அரசின் பல்வேறு நுழைவு, போட்டித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக, தேர்வை நடத்தும் யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நாட்டில் கரோனா பரவல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வர்கள் பயணிக்க வேண்டி உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்வுக்குக் குறைந்தபட்சம் 15 நாட்கள் முன்னதாகப் புதிய தேதிகள் அறிவிக்கப்படும்.

தேர்வர்கள் மற்றும் தேர்வு நடத்துவோரின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான விவரங்களை அறிய யூபிஎஸ்சி இணையதளத்தைத் தொடர்ந்து தேர்வர்கள் பார்க்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பலமுறை தள்ளி வைக்கப்பட்ட ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. முதன்மைத் தேர்வுகளும் நடைபெற்ற நிலையில், நேர்முகத் தேர்வுகள் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x