கரோனா பரவல்: யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு

கரோனா பரவல்: யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு
Updated on
1 min read

கரோனா பரவல் காரணமாக யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு 15 நாட்கள் முன்னதாகப் புதிய தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடக்கிறது.

கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராகப் பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் இத்தேர்வு உள்ளது.

கணினி வழியில் நடைபெற உள்ள தேர்வை, என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாகத் தேர்வு தொடர்ந்து 2 முறை தள்ளி வைக்கப்பட்டு, நவம்பர் மாதம் 19, 21, 26 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு மே மாதம் 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 14, 17 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக நெட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நாட்டில் கரோனா பரவல் காரணமாக யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும் தேர்வுக்குக் குறைந்தபட்சம் 15 நாட்கள் முன்னதாகப் புதிய தேதிகள் அறிவிக்கப்படும்.

தேர்வர்கள் மற்றும் தேர்வு நடத்துவோரின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான விவரங்களை அறிய என்டிஏ இணையதளத்தைத் தொடர்ந்து தேர்வர்கள் பார்க்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in