

கோவிட்-19 பரவல் அதிகரிப்பால் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான பதவிகள் எஸ்எஸ்சி எனப்படும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன.
இதில் ஆண்டுதோறும் கீழ் பிரிவு எழுத்தர் (எல்டிசி), இளம் செயலக உதவியாளர் (ஜேஎஸ்ஏ), அஞ்சல் உதவியாளர் (பிஏ), வரிசையாக்க உதவியாளர் (எஸ்ஏ) மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (DEO) ஆகிய பதவிகளுக்காக சிஎச்எஸ்எல் (CHSL) எனப்படும் ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான (10+2) தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இத்தேர்வுகள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்தியப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பாதிப்பு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான (10+2) தேர்வுகள் (சிஎச்எஸ்எல் - Tier-I) இன்று (ஏப்ரல் 20) முதல் ஒத்திவைக்கப்படுகின்றன. புதிய தேர்வுத் தேதிகள் குறித்து வருங்காலத்தில் அறிவிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்சி, சிஎச்எஸ்எல் தேர்வுகள் ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. ஏப்ரல் 27-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுவதாக இருந்த நிலையில், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வுகள் (சிஜிஎல்) மே 29 முதல் ஜூன் 7 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.