கரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடங்கியது

லேடி வெலிங்டன் சீமாட்டி பெண்கள் பள்ளி  | படம்: எல்.சீனிவாசன்
லேடி வெலிங்டன் சீமாட்டி பெண்கள் பள்ளி | படம்: எல்.சீனிவாசன்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்கி, நடைபெற்று வருகிறது.

பிளஸ் 2 பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று (ஏப்ரல் 16-ம் தேதி) தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளன. காலை 9 மணிக்குத் தேர்வுகள் தொடங்கிய நிலையில், மாணவர்கள் ஒவ்வொரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, உள்ளே அனுப்பப்பட்டனர். இயற்பியல், உயிரியல், கணினி அறிவியல் பிரிவுகளுக்கான தேர்வுகள் இன்று தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை, லேடி வெலிங்டன் சீமாட்டி பெண்கள் பள்ளியில் செய்முறைத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அரசுத் தேர்வுகள் இயக்ககம், பள்ளிகளில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுகளைத் தொடங்கியுள்ளது.

அதன்படி கரோனா அறிகுறி உள்ளவர்களைப் பள்ளிகளுக்கு அனுமதிக்க வேண்டாம். மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும்போதே உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், வளாகங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். செய்முறைத் தேர்வுக்கு முன்னதாகவும் முடிந்த பிறகும் கைகளை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் ஆய்வகங்களின் ஜன்னல் மற்றும் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவர் குழுவின் செய்முறைத் தேர்வுக்கு முன்னரும் பின்னரும், கிருமிநாசினி கொண்டு ஆய்வகம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

இயற்பியல் ஆய்வகங்களில் ஒளி ஊடுருவும் கருவிகள் மற்றும் மைக்ரோஸ்கோப், ஸ்பெக்ட்ரோமீட்டர் முறைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தாவரவியல் மற்றும் உயிரியல் செய்முறைத் தேர்வுகளில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in