Published : 15 Apr 2021 08:04 PM
Last Updated : 15 Apr 2021 08:04 PM

முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு காலவரையறை இன்றி ஒத்திவைப்பு: கரோனா பரவலால் மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலையின் காரணமாக தொற்றுப் பரவல் புதிய உச்சத்தைத் தொட்டு வருவதை அடுத்து, முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இந்தியா முழுவதும் முதல் முறையாக கரோனா தொற்றால் புதிதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில், கரோனாவுக்கு 1,038 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து 5-வது நாளாக கரோனா தொற்று எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்து பரவி வருகிறது.

இதற்கிடையே மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் வேண்டுகோளை அடுத்து, சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், 10-ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில் முதுகலை நீட் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்த 2021-ம் ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய தேதி பின்னர் முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்படும். நம்முடைய இளம் மருத்துவ மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

முதுகலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை என்பிஇ எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. இந்தத் தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுவதாக இருந்தது. இந்தியா முழுவதும் 255 நகரங்களில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x