Published : 15 Apr 2021 03:09 AM
Last Updated : 15 Apr 2021 03:09 AM

மனதின் வலிமையுடன் கல்வி வலிமையும் இணைந்தால் நமது இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியும்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

நாட்டின் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகள், சமூக மற்றும் பொருளாதார சேர்க்கை கிடைக்க வேண்டும். மனதின் வலிமையுடன் கல்வி வலிமையும் இணைந் தால் இளைஞர்களால் எதுவும் சாதிக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத் தின் 95-வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கு காணொலி மூலம் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

உலகிலேயே ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது. ஜனநாயகம் நமது நாகரிகத்தின் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறது. சுதந்திரத்துக்குப் பின்னரும் ஜனநாயக பாரம்பரியத்தை வலுப்படுத்தி முன்னேற்றப் பாதையில் நாட்டை கொண்டு செல்ல அம்பேத்கர் வலுவான அடித்தளத்தை கொடுத்துள்ளார்.

சவாலான போராட்டத்துக்கு இடையிலும் அம்பேத்கர் தனது வாழ்க்கையில் அடைந்த துயரங்கள் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளன. அவரது பிறந்தநாளில் இதை நாம் நினைவுகூர்வோம். அம்பேத்கர் காட்டிய பாதையில் தேசம் நடைபோடுவதை உறுதி செய்ய வேண்டியது நமது கல்வி அமைப்பின் தலையாய கடமை.

சர்வதேச அளவீடுகளுக்கு ஏற்றவாறு நமது புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. ஒவ்வொரு மாணவனுக்கும் சொந்த திறனும் ஆற்றலும் உண்டு. இந்த திறன்களின் அடிப்படையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்பு மூன்று கேள்விகள் எழுகின்றன.

முதலாவது கேள்வியானது அவர்களால் என்ன செய்ய முடியும்? இரண்டாவது, திறமையானவர்களாக இருந்தால் அவர் களால் என்ன செய்ய முடியும்? மூன்றாவது, அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள்? இவைதான் அந்த 3 கேள்விகள்.

மாணவர்கள் மனதின் வலிமையுடன் கல்வி வலிமையும் இணையும்போது அவர் களின் வளர்ச்சி பன்மடங்கு விரிவடைகிறது. இதன்மூலம் இளைஞர்கள் என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.

இந்தியா தற்சார்பு பாதையில் நடை போடுவதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகிறது. நாட்டின் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகள், சமூக மற்றும் பொருளாதார சேர்க்கை கிடைக்க வேண்டும். இதற்காக அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x