Last Updated : 12 Apr, 2021 12:00 PM

 

Published : 12 Apr 2021 12:00 PM
Last Updated : 12 Apr 2021 12:00 PM

வாட்ச்மேன் டூ ஐஐஎம் பேராசிரியர்: 28 வயது இளைஞரின் சாதனைக் கதை 

வறுமை காரணமாக ஆரம்பக் காலத்தில் இரவுக் காவலராகப் பணியாற்றிய 28 வயது இளைஞர் ரஞ்சித், தற்போது மத்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐஐம்) பேராசிரியராகப் பணியாற்ற உள்ள சம்பவம் பலருக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ரஞ்சித் ராமச்சந்திரன். அப்பா தையல் கலைஞர், அம்மா 100 நாள் வேலைக்குச் செல்பவர். வறுமை காரணமாக பனத்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் காவலராகப் பணியில் இணைந்தார். பகலில் அருகில் இருந்த தனியார் கல்லூரியில் பொருளாதாரப் படிப்பில் சேர்ந்தார். பகலில் படிப்பு, இரவில் காவலர் வேலை.

முதுகலைப் படிப்பை முடித்த ரஞ்சித்துக்கு, ஐஐடி சென்னையில் பிஎச்.டி. படிப்பில் சேர இடம் கிடைத்தது. உடனே சென்னை கிளம்பினார் ரஞ்சித். மலையாளம் மட்டுமே தெரிந்திருந்த அவருக்கு ஆங்கிலத்தில் படிப்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை. படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஊருக்குக் கிளம்பத் திட்டமிட்டார். எனினும் அவரின் வழிகாட்டி சுபாஷ் பேச்சைக் கேட்டபிறகு மனம் மாறினார். விடாமுயற்சியுடன் படிப்பைத் தொடர முடிவெடுத்து தன்னுடைய கனவை நனவாக்க ஆசைப்பட்டார்.

இறுதியாகக் கடந்த ஆண்டு பிஎச்.டி. பட்டம் பெற்றார் ரஞ்சித். கடந்த இரண்டு மாதங்களாக பெங்களூருவில் உள்ள கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அவருக்குத் தற்போது ஐஐஎம் ராஞ்சியில் பேராசிரியராகப் பணி கிடைத்துள்ளது.

இதுகுறித்து தார்ப்பாய் போர்த்தப்பட்ட ஒற்றைக் குடிசை வீட்டுப் புகைப்படத்துடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஞ்சித், ''ஐஐஎம் பேராசிரியர் பிறந்த வீடு இதுதான். பூக்கும் முன்பே உதிர்ந்த பல கனவுகளின் கதை எனக்கு நன்றாகவே தெரியும். இப்போது அதற்கு பதிலாக, கனவுகள் நனவாகும் கதைகள் வரவேண்டும். உங்களைச் சுற்றி நான்கு சுவர்கள் இருந்தாலும் வானம் வரை கனவு காணுங்கள். அந்த கனவுகளின் சிறகுகள் மீது, நீங்களும் ஒருநாள் வெற்றியை அடையலாம்'' என்று பதிவிட்டிருந்தார்,

இந்தப் பதிவு வைரலான நிலையில், கேரள மாநில நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக், ரஞ்சித்தைப் பாராட்டியுள்ளார். பலருக்கு முன்மாதிரியாக ரஞ்சித் திகழ்வதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், ''என்னுடைய பதிவு இத்தனை வைரலாகும் என்று நினைக்கவில்லை. இன்னும் சிலரை உத்வேகப்படுத்தலாம் என்று நினைத்து என்னுடைய வாழ்க்கைக் கதையைப் பதிவிட்டிருந்தேன். அவ்வளவுதான்.

எல்லோருமே தங்களின் கனவுகளைச் சலிக்காமல் பின்தொடர வேண்டும். ஒருநாள் நமக்கு வெற்றி சொந்தமாகும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x