Published : 09 Apr 2021 04:08 PM
Last Updated : 09 Apr 2021 04:08 PM

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளில் பிப்பெட், மைக்ரோஸ்கோப், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையிலான நாட்களில் நடைபெற உள்ளன. கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அரசு தேர்வுகள் இயக்ககம் இதற்கான முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* செய்முறைத் தேர்வுக்கு முன்னதாகவும் முடிந்த பிறகும் கைகளை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்

* மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்

* செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் ஆய்வகங்களின் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்தே வைத்திருக்க வேண்டும்.

* ஒவ்வொரு மாணவர் குழுவின் செய்முறைத் தேர்வுக்கு முன்னரும் பின்னரும் அறையைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

*செய்முறைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
சானிடைசர் அருகே தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது.

*வேதியியல் ஆய்வகங்களில் திரவங்களை வாய் மூலம் உறிஞ்சி எடுக்கப் பயன்படுத்தப்படும் பிப்பெட் கருவியைப் பயன்படுத்த வேண்டாம்.

*அதற்குப் பதிலாக திரவங்களை எடுக்க பியூரெட் அல்லது வேறு குழாய்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இவற்றின் மூலம் துல்லியமான முடிவுகள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அவற்றுக்கேற்ப ஆய்வு மதிப்புகளை மாற்றிக் கணக்கிட்டு வழங்கலாம்.

*கைகளில் சானிடைசர் பயன்படுத்தி இருப்பதால் எளிதில் தீப்பிடிக்கும் கருவிகளைக் கையாள்வதற்கு முன் ஆசிரியர்களும் மாணவர்களும் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

*இயற்பியல் ஆய்வகங்களில் ஒளி ஊடுருவும் கருவிகள் மற்றும் மைக்ரோஸ்கோப், ஸ்பெக்ட்ரோமீட்டர் முறைகளையும் மேற்கொள்ள வேண்டாம்.

*தாவரவியல் மற்றும் உயிரியல் செய்முறைத் தேர்வுகளிலும் மைக்ரோஸ்கோப் பயன்பாடு கூடாது.

*கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கும், தொற்று குணமடைந்த பின் வேறு ஒரு நாளில் செய்முறைத் தேர்வை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x