Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தினால் வெற்றி பெறலாம்: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தினால் வெற்றி பெறலாம் என்று மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறினார்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல்10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுஎழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, ‘பரீக்ஷா பே சார்ச்சா' என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார்.

அந்த வகையில், 4-வது ஆண்டாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

தேர்வுக்கு மும்முரமாக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு முதலில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்வுகள் என்றாலே மாணவர்கள் மத்தியில் ஒருவித பதற்றமும், அச்ச உணர்வும் ஏற்படுகிறது. இந்தபயம் தேவையற்ற ஒன்று. ஒரு ஆண்டு முழுவதும் நீங்கள் படித்துபழக்கப்பட்ட பாடங்களில் இருந்துதான், தேர்வில் கேள்விகள் கேட்கப்படவுள்ளன. அப்படியிருக்கையில், எதற்காக பயப்பட வேண்டும்? துணிச்சலுடன் ஒரு காரியத்தில் இறங்குபவர்களால்தான் வெற்றிக்கனியை ருசிக்க முடியும். இதுவரலாறு நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம். எனவே, பயத்தை விட்டொழித்துவிட்டு உற்சாகத்துடன் தேர்வுக்கு தயாராக வேண்டும்.

அதேபோல, பெற்றோர்களும், ஆசிரியர்களும் தேர்வு சமயத்தில்மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். மாறாக, அவர்களை பயமுறுத்தக் கூடாது. மாணவர்களுக்கு இந்த நேரத்தில் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். தேர்வுகள் முக்கியமானதுதான். ஆனால், அது உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்க போகும் விஷயம் அல்ல. ஒரு தேர்வுடன் உங்கள் வாழ்க்கை முடிந்து விடப் போவதில்லை. ஆகவே, மனதை லேசாக வைத்துக் கொண்டு தேர்வுக்கு தயாராகுங்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வரலாற்றினை திருப்பிப் பாருங்கள். அவர்கள் கட்டாயம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற்றவர்களாகவே இருப்பார்கள். அதேபோல, மாணவர்களும் தங்கள் கவனத்தை பலதரப்பட்ட விஷயங்களில் சிதறவிடாமல், ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தி உழைத்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x