Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் பொறியியல் பாடப்புத்தகம்- வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழி கல்வி அமல்: ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்

தமிழ் உள்ளிட்ட 8 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடப் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், வரும் கல்வி ஆண்டு முதல் தாய்மொழிக் கல்வி அமலுக்கு வர உள்ளதாகவும் ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்தார்.

நம் நாட்டின் தேசிய கல்விக் கொள்கை 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர், 1986 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அதன்பின் கடந்த2016-ம் ஆண்டும் கல்வி கொள்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டுபல்வேறு திருத்தங்களும், மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு, கஸ்தூரி ரங்கன் தலைமையில் பரிந்துரைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதில் உள்ள மும்மொழிக் கொள்கை, நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. அதேநேரம்,தாய்மொழியில் கல்வி கற்கவேண்டும் என கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தாய்மொழியில் கல்விபயிலுவதை ஊக்குவிக்க அகிலஇந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடப் புத்தகங்களை தமிழ் உள்ளிட்ட 8 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

இதுதொடர்பாக ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியில் பயிலவேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. அதன்படி, பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த பாடத்தை தமிழ், பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு ஆகிய 8 மொழிகளில் பேராசிரியர்களைக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அதேநேரம் பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை தாய்மொழியில் பயிலவும், பயிற்றுவிக்கவும் சில நடைமுறை சிக்கல்கள் நிலவுகின்றன.

அதாவது, ஆங்கிலத்தில் உள்ளதொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகளை துல்லியமாக இந்திய பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. எனவே, முக்கியமான தொழில்நுட்ப வார்த்தைகள் ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டு வருகின்றன.

இந்த மொழிபெயர்ப்பு பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. அதிகபட்சமாக இந்தியில் 132 பாடப்பிரிவுகளுக்கான பாடப் புத்தகங்களும், தமிழில் 94 பாடப் பிரிவுகளுக்கான புத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அதேபோல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்க சென்னை ஐஐடி உள்ளிட்ட முன்னணி ஐஐடிகள் இணைந்து புதிய செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கி உள்ளது. இதில் 90 முதல் 92 சதவீதம்வரை துல்லியமாக மொழிபெயர்க்கப்படுகிறது.

அதன்படி, மொழிபெயர்ப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் பாடங்களைப் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தாய்மொழியில் பாடங்களைக் கற்றுத் தர விரும்பும் கல்லூரிகள் ஏஐசிடிஇ-யிடம் ஒப்புதல் பெற முறையாக விண்ணப்பிக்கலாம். அதேநேரத்தில் பிராந்திய மொழியில் பாடங்களை கட்டாயம் கற்றுத்தரவேண்டும் என்று கல்லூரிகளுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏஐசிடிஇ-யின் இணைப்பில் உள்ள கல்லூரிகளில் இளநிலை படிப்புகளை தாய்மொழியில் வழங்குவது குறித்து நடத்திய கருத்துக்கேட்பில் 83 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 44 சதவீதம் பேர் தாய்மொழியில் படிக்க விருப்பம் தெரிவித்தனர். குறிப்பாக 12 ஆயிரத்து 487 மாணவர்கள் தமிழ்மொழியிலும், 7 ஆயிரத்து 818 மாணவர்கள் இந்தியிலும் படிக்க விருப்பம் தெரிவித்தனர்.

பொறியியல் படிப்பை தமிழில் கற்றுத்தரும் நோக்கில் தமிழ்வழி பொறியியல் படிப்புகளை அண்ணாபல்கலைக்கழகத்தில் 2010-ம் ஆண்டு தமிழக அரசு அறிமுகம் செய்தது. முதல்கட்டமாக இயந்திரவியல் மற்றும் கட்டிடவியல் பாடப்பிரிவுகள் தமிழில் தொடங்கப்பட்டன. ஆனால், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல காரணங்களால் தமிழ்வழி பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைதொடர்ந்து குறைந்து வருகிறது.இதனால் தமிழ் பொறியியல் படிப்புஇடங்களின் எண்ணிக்கை கடந்தஆண்டு பாதியாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x