

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1-ம் தேதி காகித முறையில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப். 13-ம் தேதி நடத்தப்பட்டது.
எனினும், நடப்பாண்டு நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் 2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு முதல் கட்டமாக பிப்ரவரி 23 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இதுகுறித்து ஜேஇஇ மெயின் தேர்வு அறிவிப்பின்போதே மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வின்போதாவது நீட் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போதும் நீட் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் 1-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு காகித முறையில் நடத்தப்படும் என்று தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நேற்று இரவு அறிவித்துள்ளது.
இதுகுறித்து என்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு விதிமுறைகளின்படி 2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நடத்தப்படும். ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் காகித முறையில் ஆகஸ்ட் 1-ம் தேதி தேர்வு நடைபெறும்.
பாடத்திட்டம், வயது தகுதி, இட ஒதுக்கீடு, தேர்வுக் கட்டணம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் விரைவில் வெளியாகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.