

காரைக்காலில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், புதுவை மாநில ஓவியர் மன்றமும் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தை ஒட்டி, எய்ட்ஸ் நோயாளிகளிடம் 'அன்பு, ஆதரவு காட்டுவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஓவியப் போட்டியை நடத்தின. இதில் காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று 213 ஓவியங்களை வரைந்து அனுப்பி வைத்தனர். இதில் 20 ஓவியங்கள் பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்டன.
அந்த ஓவியங்களை வரைந்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, கோட்டுச்சேரி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இன்று (மார்ச் 11) நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் மார்க்ரெட் தலைமை வகித்தார். ஓவியர் மன்றத் தலைவர் இபேர், ஓவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் போட்டிகள் பற்றியும், மாணவ மாணவிகள் ஆர்வமாகப் பங்கேற்பது குறித்தும் பேசினார்.
பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள காரைக்காலைச் சேர்ந்த கே.கேசவசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி, பாராட்டிப் பேசினார். நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர் முத்துக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.