Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM

வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள் தேர்வுகள் தொடக்கம் - தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் : பிளஸ் 2 ஆசிரியர்கள் வலியுறுத்தல்

வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள் பிளஸ்-2 தேர்வுகள் தொடங்க இருப்பதால் தங்களுக்கு தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிளஸ்-1, பிளஸ்-2ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பிளஸ்-2 தேர்வு மட்டும் மே 3-ம் தேதி தொடங்க உள்ளது. கரோனா ஊரடங்கு நேரத்தில் தனியார் பள்ளிகளில் மட்டுமே பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் முறையாக வகுப்புகள் நடந்துள்ளன. அவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும்பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை பாடங்கள் நடத்தி முடிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பள்ளிகள் திறந்த பிறகுதான் பிளஸ்-2 பாடங்களைப் படிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடும்அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகளுக்கான தேதி ஒரு சிலநாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் வழக்கம்போல் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் பயிற்சி வகுப்பு

கரோனா ஊரடங்கு விடுமுறையை ஈடுகட்டும் வகையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு சனிக்கிழமையும் பள்ளிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தேர்தல்பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை நடந்தால் ஆசிரியர்கள் தேர்வுகள் முடியும் வரை ஓய்வேஇல்லாமல் பணிபுரிய வேண்டி இருக்கும். அதனால் அவர்கள் பிளஸ்-2 மாணவர்களை தேர்வுக்குத் தயார்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 2-ம் தேதிக்கு மறுநாள் (மே 3) பிளஸ்-2 தேர்வு நடக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை சில தொகுதிகளில் நள்ளிரவு வரை நடக்கும். அதுவரை வாக்கு எண்ணும் மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 ஆசிரியர்கள் இருந்தாக வேண்டும். அதனால், தேர்தல் பணிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x