Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

‘நாடா’ நுழைவுத் தேர்வு - விண்ணப்பம் இன்று தொடக்கம்

சென்னை

பி.ஆர்க். எனப்படும் இளநிலை கட்டிடவியல் பொறியியல் படிப்பில் சேருவதற்கான ‘நாடா’ (தேசிய கட்டிடவியல் திறனறித் தேர்வு) நுழைவுத் தேர்வுக்கு இன்று (மார்ச் 5) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என இந்தியஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.

ஆண்டுக்கு 2 முறை தேர்வு

பி.ஆர்க். படிப்பில் சேர ‘நாடா’நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வை இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, 2019-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2021-ம் ஆண்டுக்கான ‘நாடா’ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, பி.ஆர்க். (5 ஆண்டு) படிப்பில் சேர முதல் ‘நாடா’ தேர்வு எழுத விரும்புவோர் மார்ச் 5-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும், 2-ம் தேர்வு எழுத விரும்புவோர் மார்ச் 5-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரையும் http://nata.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஏப்.10-ல் முதல் தேர்வு

முதல் தேர்வு ஏப்.10-ம் தேதி நடைபெறும். அதற்கான முடிவுகள் 14-ம் தேதி வெளியிடப்படும். 2-ம் தேர்வு ஜூன் 12-ம் தேதி நடத்தப்பட்டு 16-ம் தேதி முடிவு வெளியிடப்படும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை ‘நாடா’வின் இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x