

சிறந்த அறிவியல் ஆசிரியர் எனப் பாராட்டி தமிழக அரசு வழங்கிய தொகையை, தான் பணிபுரியும் பள்ளிக்கே அந்த ஆசிரியர் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அறிவியல் துறையில் சிறந்து விளங்குவோருக்கு மாநில அளவில் விருது வழங்கும் விழா சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஸ் லக்கானி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
இதில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை விலங்கியல் துறை ஆசிரியர் கே.ஆர்.ரமேஷூக்கு விருது வழங்கப்பட்டது. அதோடு, ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்பட்டது.
மாநில அளவில் விருது பெற்று புதுக்கோட்டை மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்த ரமேஷை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், நேர்முக உதவியாளர்கள் ஜீவானந்தம், கபிலன், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சாலைசெந்தில் உள்ளிட்டோர் பாராட்டினர்.
இதற்கிடையே தனக்குக் கிடைத்த தொகையைப் பள்ளியின் வளர்ச்சிக்காக ஆசிரியர் ரமேஷ் கொடுத்துள்ளார். இது குறித்து ஆசிரியர் ரரமேஷ் கூறியபோது, “நான் அதே பள்ளியில் படித்து, அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். எனவே, முன்னாள் மாணவர் என்கிற அடிப்படையில் பள்ளின் வளர்ச்சிக்காக அரசு வழங்கிய ரூ.25,000 ரொக்கத்தைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முருகனிடம் கொடுத்துள்ளேன்” என்றார்.
அரசு வழங்கிய பரிசுத் தொகையை தான் பணியாற்றும் அரசுப் பள்ளிக்கே ஆசிரியர் ரமேஷ் கொடுத்தது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.