புதுச்சேரியில் 9,10,11-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள்; பெற்றோர், நிபுணர்களிடம் கருத்துக் கேட்டு முடிவு- தமிழிசை

புதுச்சேரியில் 9,10,11-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள்; பெற்றோர், நிபுணர்களிடம் கருத்துக் கேட்டு முடிவு- தமிழிசை
Updated on
1 min read

புதுச்சேரியில் 9,10,11-ம் வகுப்புகளுக்குப் பொது தேர்வுகளை நடத்துவது குறித்துப் பெற்றோர்கள், கல்வி நிபுணர்களிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்யப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

முன்னதாகத் தமிழிசை, ''புதுச்சேரியில் உள்ள குழந்தைகளுக்குத் தேர்வு நடத்தலாம். ஏனெனில் கடந்த அக்டோபர் முதல் அவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். கரோனா, தேர்தல் தேதிகளால்தான் தேர்வைப் பிறகு நடத்துவது பற்றிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளோம். அதனால் புதுச்சேரியில் தேர்வில் முதலில் இருந்த பழைய முறையே தொடரும். இதில் குழப்பம் இல்லை'' என்று தெரிவித்திருந்தார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு இன்று முதல் வழக்கம் போல் பள்ளிகள் முழு நேரமும் இயங்கத் தொடங்கியுள்ளன. இதையும் மாணவர்களுக்குப் பால் வழங்கப்படுவதையும் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பள்ளிகள் முழுநேரம் இயங்குவது தொடர்பாகவும் தேர்வுகள் தொடர்பாகவும் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதனால், கரோனா தொற்று இருக்கும் நிலையில் புதுச்சேரியில் பள்ளிகளை முழு நேரமும் நடத்தலாமா என்று ஆலோசனை செய்து வருகிறோம். அதன் அடிப்படையில்தான் முடிவு செய்வோம்.

புதுச்சேரி, காரைக்காலில் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் தொடர்பாக பெற்றோர், கல்வி நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டு அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். அதன் அடிப்படையில் முடிவு எடுப்போம். அனைத்து முடிவுகளும் மக்கள் நலனை ஒட்டியே இருக்கும்'' என்று துணைநிலை ஆளுநர் தமிழிசைதெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in