

9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டது கல்வியாளர்களின் ஆலோசனைகளுக்குப் பின்பே எடுக்கப்பட்ட முடிவு என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு 9-ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வும், 10, 11-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்குக் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கரோனா தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. பொதுவாக இந்த நேரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வரவேற்புக்கு உரியதல்ல. அதிமுக அரசு செய்ய முடிகிற அனைத்தையும் ஆட்சிக் காலத்தில் செய்திருக்கிறது.
கல்வியாளர்களிடம் பெறப்பட்ட ஆலோசனைகளுக்குப் பின்பே 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருகிறார்'' என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.