

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளிகளில், ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு ஆண்டுதோறும் பிப்ரவரி, ஜூலை மாதங்களில் நடத்தப்படுகிறது. இத்தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது.
இந்தத் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற வேண்டிய ‘சி-டெட்’ தேர்வு கரோனா தொற்று காரணமாக நடத்தப்படவில்லை. அந்தத் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி நாடு முழுவதும் 135 முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இந்நிலையில் இதற்கான தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ளது.
இதில் முதல் தாளில் 4,14,798 பேரும் இரண்டாவது தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை https://ctet.nic.in/, https://cbse.nic.in/ ஆகிய இணையதளங்களில் காணலாம்.
சி-டெட் தேர்வின் முதல் தாளை 12 லட்சத்துக்கு மேற்பட்டோரும் இரண்டாவது தாளை 11 லட்சத்துக்கு மேற்பட்டோரும் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.