

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் அகில இந்தியத் தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாகக் கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசித் தேதி ஆகும்.
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
''2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சிக் குழுமத்தால் (NCVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாகக் கலந்துகொள்ள கீழ்க்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதல் வகை: தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்
ஏற்கெனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐடிஐயில் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் அலைடு (Allied) தொழிற்பிரிவில் 1 வருடப் பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறும் பொருட்டு தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
இரண்டாம் வகை: திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்
திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற (COE NTC) பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருடப் பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
மூன்றாம் வகை: ஆகஸ்ட் 2018-க்கு முன் SCVT சேர்க்கை பெற்றவர்
ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழுமம் (SCVT) தொழிற்பிரிவு பயிற்சியாளர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
நான்காம் வகை: பிற விண்ணப்பதாரர்கள்
i. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவர் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாளில் 21 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
ii. தொழிற் பழகுநர் சட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற்சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு / உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iii. ஆகஸ்ட் 2019-ம் ஆண்டில் SCVT திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யப் பெற்ற பயிற்சியாளர்கள் இந்த Category-இன் கீழ் தனித்தேர்வராக விண்ணப்பித்து NTC பெறலாம். மேற்கண்ட நான்கு வகைகளிலும் தனித்தேர்வராக ஒரு தொழிற்பிரிவில் தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர் தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள அத்தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுள்ள i, iii & iv வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு (இரண்டாம் வகையைத் தவிர) முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) பாடத்தில் 31.03.2021 மற்றும் செய்முறை (Practical) தேர்வு 01.04.2021 ஆகிய தேதிகளில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் இத்துறையால் நடத்தப்படும். கருத்தியல் தேர்வில் கொள்குறி வகை வினாக்கள் (objective type questions) மட்டுமே இடம்பெறும்.
கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ள இயலும். தேர்வு மையம் பின்னர் அறிவிக்கப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் இரண்டாம் வகை விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஜூன் 2021இல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் முதல் வருடத் தேர்வில் தனித்தேர்வராகக் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
தொடர்ந்து தொழிற்பிரிவிற்கு ஏற்ப அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற் சான்றிதழ் (National Trade Certificate) வழங்கப்படும். தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்பப் படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்கக் குறிப்பேடு, நெறிமுறைகள் மற்றும் இது தொடர்பான பிற விவரங்களை https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ200/- செலுத்தியமைக்கான செலுத்துச் சீட்டு, கல்விச் சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 15.03.2021-க்குள் கீழ்க்கண்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்ககளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசித் தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
1. அம்பத்தூர், 2. வடசென்னை, 3. கிண்டி, 4. வேலூர், 5. திருவண்ணாமலை, 6.செங்கற்பட்டு, 7. திருச்சி, 8. தஞ்சாவூர், 9. கடலூர், 10. நாகபட்டினம், 11. உளுந்தூர்பேட்டை, 12.கோயம்புத்தூர், 13. ஈரோடு, 14. தாராபுரம், 15. சேலம், 16. ஓசூர், 17. மதுரை, 18. திண்டுக்கல், 19. தேனி, 20. புதுக்கோட்டை, 21. பரமக்குடி, 22. நாகர்கோவில், 23. திருநெல்வேலி (பேட்டை), 24.தூத்துக்குடி, 25. விருதுநகர்''
இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.