ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தியிருப்பதைத் திரும்பப் பெறுக: தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை

ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தியிருப்பதைத் திரும்பப் பெறுக: தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை
Updated on
1 min read

ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தியிருப்பதைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

''தமிழக அரசு புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாக்கிடாத நிலையில், படித்த இளைஞர்களுக்கு அரசுப் பணி என்பது வெறும் கனவாகவே இருந்து வருகிறது. தற்போது, தமிழக அரசுப் பணியிடங்கள் அவுட் சோர்ஸிங் முலம் பணியமர்த்தப்படுவதாலும், மத்திய, மாநில அரசுகளின் பணியிடங்களில் வேறு மாநிலத்தவர்களே அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வருவதாலும் படித்த இளைஞர்கள் பெரும் விரக்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தித் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.

மேலும் இந்த அறிவிப்பானது, தற்போது பணியாற்றிவரும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் மட்டுமே வழங்கிட முடியும். ஓய்வூதியப் பணப்பலன்கள் எதையும் வழங்கிட இயலாது எனும் நிலையிலேயே தமிழக அரசின் நிதி நிலைமை மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்வதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் படித்த இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புகளைப் பறிக்கும், எதிர்கால அரசுப் பணியெனும் கனவைச் சிதைக்கும் இந்த அறிவிப்பைத் தமிழக முதல்வர் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு நா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in