Last Updated : 25 Feb, 2021 01:41 PM

 

Published : 25 Feb 2021 01:41 PM
Last Updated : 25 Feb 2021 01:41 PM

கரோனா விடுமுறையில் நாதஸ்வரம் கற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்: பரிசுத் தொகை வழங்கி பாராட்டிய அமைச்சர்

கரோனா விடுமுறையில் நாதஸ்வரம் கற்றுக்கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு அமைச்சர் பரிசளித்ததை அடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் அம்புக்கோவில் பகுதியைச் சேர்ந்த கோபு என்பவரின் மகன் உதயநிதி (12), தனபால் மகன் ஜீவா (12). இவர்கள் இருவரும், அம்புக்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். அந்த விழாவில், அப்பள்ளி மாணவர்கள் ஜீவா, உதயநிதி ஆகியோர் நாதஸ்வரம் இசைத்தனர். இவர்களின் இசை ஞானத்தைப் பாராட்டி, இருவருக்கும் அதே மேடையிலேயே அமைச்சர் பரிசுத் தொகை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, மாணவர்கள் இருவரையும் நேரில் வரவழைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பாராட்டினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முன்பும் மாணவர்கள் 2 பேரும் நாதஸ்வரம் இசைத்தனர்.

இதுகுறித்து மாணவர் ஜீவா கூறும்போது, ''எங்களது தாத்தாக்கள் இருவருமே நாதஸ்வர வித்வான்கள். கரோனா விடுமுறையினால் வீட்டில் இருந்தபோது உதயநிதியின் தாத்தாவும் நாதஸ்வர வித்வானுமான 'சேகல்' ரங்கநாதனிடம், நாதஸ்வரம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எங்களது விருப்பத்தைத் தெரிவித்தோம். அதையேற்றுக் கடந்த 6 மாதங்களாக தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் அவர் நாதஸ்வரம் கற்றுத் தந்தார்.

இதுவரை 3 பொது நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் இசைத்துள்ளோம். அதைப் பார்த்து மக்கள் வெகுவாகப் பாராட்டினர். பள்ளி விழாவுக்குப் பிறகு மாணவர்கள், உறவினர்களும் பாராட்டுகின்றனர். இசைத் துறையில் மிகப்பெரிய ஜாம்பாவான்களாக வரவேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x