Last Updated : 24 Feb, 2021 08:06 PM

 

Published : 24 Feb 2021 08:06 PM
Last Updated : 24 Feb 2021 08:06 PM

யூபிஎஸ்சி தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை: வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக யூபிஎஸ்சி தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை என்றுகூறி அதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல முறை தள்ளி வைக்கப்பட்ட ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. ஆனால், கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் அச்சம் காரணமாக பலரால் தேர்வில் பங்கேற்க முடியவில்லை.

இந்நிலையில், வயது வரம்பு முடிந்தவர்கள், தேர்வில் பங்கேற்க இயலாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது யுபிஎஸ்சி சார்பில் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஜன.29 அன்று விசாரணைக்கு வந்தபோது, ''பல்வேறு அசாதாரணமான சூழலில், இக்கட்டான தருணங்களில் இதற்கு முன்பாகத் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது தற்போது மட்டும் ஏன் மறுவாய்ப்பு வழங்க மறுக்கப்படுகிறது?'' என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் பிப்.5-ம் தேதி அன்று இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வைக் கடைசித் தேர்வாகக் கொண்டு தேர்வு எழுத முடியாதவர்களுக்கு, இந்தாண்டு மீண்டும் சில கட்டுப்பாடுகளுடன் மறு வாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு யூபிஎஸ்சி நிர்வாகமும் சம்மதம் தெரிவித்தது.

ஆனால் வயது வரம்பு அடிப்படையில் கடந்தாண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்வு கடைசித் தேர்வாக இருந்து, தேர்வு எழுத முடியாமல் போன விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே மறு வாய்ப்பு அளிக்கப்படும் என யுபிஎஸ்சி தரப்பில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி விளக்கமளிக்கப்பட்டது. 2021-22ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கைத் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x