Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

புதிதாக சேர்ந்தவர்களுக்கு பதிவு எண்கூட வழங்கப்படாத நிலையில் பாலிடெக்னிக்குகளில் விதிகளை மீறி பருவத் தேர்வு: ஏஐசிடிஇ அங்கீகரிக்காது என தகவல்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிதாக சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு பதிவு எண்கூட வழங்கப்படாத நிலையில், விதிகளை மீறிபருவத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 416 தனியார் கல்லூரிகள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் பாலிடெக்னிக் படிப்புகளில் முதலாண்டு மற்றும் நேரடி 2-ம் ஆண்டில் 92 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இணையவழி யி லேயே வகுப்புகள் நடைபெற்றன.

இந்நிலையில், முதலாண்டு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு மற்றும் நேரடியாக 2-ம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு 3-ம் பருவத் தேர்வு ஆகியவை கடந்த 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி நிறைவு பெற்றது.

சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை முழுமையாக நடந்து முடிவதற்குள், மாணவர்கள் பருவத் தேர்வு எழுதி முடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசு பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன.

மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியை தேர்வு செய்யும்போது மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அதன்பிறகு மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு சான்றிதழ் வழங்கப்பட்டு, ஓரிரு வாரத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் பதிவு எண் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு பதிவு எண்வழங்கப்படும்போதுதான் கல்லூரியில் சேர்க்கை பெற்றதாக அங்கீகாரமாகும். இந்த வழிமுறைகளை பின்பற்றிதான் சேர்க்கை செய்யவேண்டும் என்று விதிகள் உள்ளன.

ஆனால், தற்போது பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நேர்மாறாக நடந்துள்ளது. அதாவது, கல்லூரி அளவிலேயே மாணவர்களுக்கு தற்காலிக எண் வழங்கப்பட்டது. அசல் சான்றிதழ் எதுவும் இதுவரை சரிபார்க்கப்படவில்லை. இதனால், மாணவர்களுக்கு இயக்ககத்தின் பதிவு எண்ணும், சேர்க்கைக்கான அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

ஆனால், அதற்குள் விதிகளைமீறி பாலிடெக்னிக் பருவத் தேர்வுகளை இயக்ககம் நடத்தியுள்ளது. இதுவரை தேர்வு எழுதிய மாணவர்களில் 106 பேரின் சான்றிதழ்களில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. தவிர, இந்த தேர்வை ஏஐசிடிஇ அங்கீகரிக்காது.

முறையாக சரிபார்ப்பு பணி நடந்திருந்தால் சான்றிதழ் சரியில்லாத மாணவர்கள் சேர்க்கை பெற்றிருக்க மாட்டார்கள். இதில் யாரேனும் சில மாணவர்கள் நீதிமன்றத்தை நாடினால் பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்றனர்.

இதுதொடர்பாக தொழில்நுட்ப இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா பரவல் காரணமாகவே சான்றிதழ் சரிபார்ப்பு பணியை விரைவாக நடத்த முடியவில்லை. அதேநேரம், மாணவர்களின் சான்றிதழை சரிபார்க்கவும், பதிவு எண் வழங்கவும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x