

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வில் 7,386 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
அரசுப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் தோறும் ரூ.1,000 வீதம், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2020-21-ம் கல்வியாண்டில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் திறனறிவு தேர்வுகள் நேற்று நடைபெற்றன. வேலூர் மாவட்டத்தில், வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி ஆக்சீலியம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 21 மையங்களில் தேசிய திறனறிவு தேர்வுகள் நேற்று நடைபெற்றன. இத்தேர்வு காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற்றது.
ஒவ்வொரு மையத்திலும் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டன. மாணவர்கள் அனை வரும் முகக்கவசம் அணிந்தபடி தேர்வு எழுத வந்தனர். குடிநீர், சானிடைசர் உடன் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் தேசிய திறனறிவு தேர்வு எழுத 2,439 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 2,307 பேர் மட்டுமே நேற்று தேர்வில் கலந்து கொண்டனர். 132 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், 21 மையங்களில் தேசிய திறனறிவு தேர்வுகள் நடைபெற்றன. 2,881 பேர் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்த நிலையில், 2,777 பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். 104 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையத்தினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 21 மையங்களில் தேசிய திறனறிவு தேர்வுகள் நேற்று நடைபெற்றன. 2,399 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 2,302 பேர் மட்டுமே நேற்று தேர்வில் கலந்து கொண்டனர். 97 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
3 மாவட்டங்களில் நடைபெற்ற தேசிய திறனறிவு தேர்வை யொட்டி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி, காவல் துறை பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.