பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் அரசுக் கட்டணம்: அரசாணை வெளியீடு

பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் அரசுக் கட்டணம்: அரசாணை வெளியீடு
Updated on
1 min read

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கையாகும். 6.09.2017 அன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக்கல்லூரியை அரசு மருத்துவக்கல்லூரியாக கருதப்படும் என அறிவித்தார்.

இதன்படி அரசாணை (நிலை) எண் 308-ன் போக்குவரத்து துறை, நாள் 24.10.2018ல் வாயிலாக, ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக்கல்லூரி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வசம் ஒப்படைக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது.

இதில், அக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பயிலும் மாணவர்களுக்கு ரூ 3.85 இலட்சம் ஆண்டு கட்டணமாக இருக்கும் என்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 30 எம்.பி.பி.எஸ் இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசாணை (நிலை) எண் 57, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, நாள் 28.02.2019ல் ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக்கல்லூரியை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வசம் ஏற்றுக் கொண்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. பின்பு, இக்கல்லூரி அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி என பெயர் மாற்றம் செய்து ஆணையிடப்பட்டது.

இதற்கிடையே, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக்கல்லூரியாக இருக்கும் என 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் கடந்த 1.2.2021 அன்று ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரியின் கட்டண விகிதத்தை பிற அரசு மருத்துவக்கல்லுhரிகளுக்கு இணையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் போராடிவருகின்றனர்.

அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெருந்துரை, ஈரோடு மாவட்ட கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து வந்த கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசீலித்து இதர அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் இராஜா முத்தையா கல்லூரிக்கு இணையாக அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரியின் மருத்துவ பட்டப்படிப்பு கட்டணத்தை (அதாவது எம்.பி.பி.எஸ் பாடப்பிரிவிற்கு ரூ 13,610/- ஆண்டு கட்டணம்) நிர்ணயித்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in