Published : 17 Feb 2021 08:01 PM
Last Updated : 17 Feb 2021 08:01 PM

இணையத்தில் தமிழக அரசின் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள்: ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம்

தமிழக அரசின் ஐஏஎஸ் பயிற்சி இலவச வகுப்புகள் இணையத்தில் நேரலையாகவும் யூடியூப் பக்கத்திலும் ஒளிபரப்பப்பட்டு வருவதால் ஆர்வமுள்ளோர் அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம்.

இதுதொடர்பாகப் பயிற்சித் துறைத் தலைவரும் கூடுதல் தலைமைச் செயலருமான வெ.இறையன்பு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் இயங்கி வரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 54 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. மத்தியத் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள அகில இந்தியக் குடிமைப் பணிக்கான முதனிலைத் தேர்வில் தமிழக இளைஞர்கள் கலந்துகொள்ள ஏதுவாக இந்த பயிற்சி மையத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வுக்கான இணைய வழி வகுப்புகள் 08.02.2021 அன்று முதல் பின்வரும் அட்டவணையின்படி நடைபெற்று வருகின்றன.

10.15 மணி முதல் 11.30 மணி வரை- முதல் பாட நேரம்
11.45 மணி முதல் 1.00 மணி வரை - இரண்டாவது பாட நேரம்
2.00 மணி முதல் 3.15 மணி வரை - மூன்றாவது பாட நேரம்
3.30 மணி முதல் 4.45 மணி வரை - நான்காவது பாட நேரம்.

முதனிலை பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்திய வரலாறு, தேசிய விடுதலைப் போராட்டம், புவியியல், அரசியல், பொருளாதாரம், அறிவியல், சுற்றுச்சூழல், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பொருண்மைகளில் பாடங்கள் நடைபெற்று வருகின்றன.

எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள் இவ்வாய்ப்பினை நேரடி இணைய வழி வகுப்பு மற்றும் AICSCC TN என்ற யூடியூப் பக்கம் மூலம் பயின்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நேரடிப் பயிற்சி பெற முடியாதவர்கள் பார்த்தும் கேட்டும் பயன்பெறவே இத்தகைய வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பணிக்குச் செல்பவர்களும் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களும் தங்கள் ஓய்வு நேரத்தில் பார்த்துப் பயனடைய முடியும்''.

இவ்வாறு பயிற்சித் துறைத் தலைவர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x