Published : 16 Feb 2021 12:38 PM
Last Updated : 16 Feb 2021 12:38 PM

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிரிவில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், காணொலி மூலமே பாடங்களைக் கற்று வருகின்றனர். இதனால் பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைத்து, பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்குகின்றன.

இந்நிலையில் செய்முறைத் தேர்வுகளை நடத்தும்போது பின்பற்ற வேண்டிய கரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ளார். அதில் வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

* ஆய்வகங்களில் 1% சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் தெளிக்கப்பட வேண்டும். அதே கரைசலை எடுத்துப் பள்ளி வளாகம், பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* பள்ளிகளின் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் அல்லது தேவைப்படும் இடங்களில் ஆல்கஹால் கொண்ட கிருமிநாசினி, சோப்புகள் வைக்கப்பட்டு, கை கழுவும் வசதிகள் செய்யப்பட வேண்டும்.

* வெப்பப் பரிசோதனைக் கருவிகள், கிருமிநாசினிகள், சோப்புகள் போன்றவை பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* கழிப்பறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு, தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

* நுழைவுவாயில் மற்றும் பள்ளிக்குள் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

* அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசங்களை அணிந்திருப்பதைத் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* பள்ளி வளாகங்களில் சுற்றுச்சுவர்கள், நுழைவு வாயில் கேட்டுகள், வகுப்பறைக் கதவுகள் உட்பட பகுதிகளை தேவையின்றித் தொடுதல் கூடாது.

* அனைத்துவித ஆய்வகங்களிலும் ஒரு மாணவர் பயன்படுத்திய உபகரணங்களைச் சுத்தம் செய்யாமல் அடுத்தவர்களுக்கு வழங்கக் கூடாது.

இவ்வாறு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x